Tuesday, July 2, 2024

இளவரசியும் தங்க சிங்கமும் - பாகம் 2

 

அந்த அடுத்த எட்டு நாட்களுக்கு, 

முதல் மகன் அரண்மனையின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளிலும் அந்த இளவரசியை தேடி அலைந்தார் . ஆனால் அவரால் அந்த இளவரசியை எட்டு நாட்களுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஆகவே அவர் ஒன்பதாம் நாள் காலையில் அவர் கொல்லப்பட்டார்.

இதனிடையில் அந்த வியாபாரி யுடைய இரண்டாவது மகன் தன்னுடைய தமையனை பற்றி எந்த தகவலும் வராததால் மிகவும் கவலையுடன் தந்தையை அணுகி “ அண்ணன் இன்னும் வராததால் நான் அவரை தேடி போக விரும்புகிறேன் . ஆகவே எனக்கு அண்ணனுக்கு செய்தது  போல் ஒரு கப்பலும் பணமும் கொடுத்தால் அண்ணனை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறேன்” 

என்று கூறியவுடன் அந்த வியாபாரியும் சம்மதித்து அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் . இரண்டாவது மகன் காற்றின் திசையில் ஸசென்றபோது ஒரு கடற்கரையில் தன் அண்ணனுடைய கப்பல் இருந்ததை கண்டார் .  உடனே அவருக்கு தன் அண்ணன் இந்த நாட்டில் தான் எங்கோ இருக்கிறார் என்று தெரிந்து , அந்த கடற்கரையில் தன்னுடைய கப்பலை நிறுத்திவிட்டு இறங்கினார் . அப்பொழுது இரண்டாவது மகன் கண்ணிலும் முதல் மகன் பார்த்த அந்த விளம்பரப் பலகை தெரிந்தது.  உடனே அவருக்கு தன்னுடைய அண்ணன் நிச்சயம் இந்த இளவரசியை தேடி போயிருப்பார் என்று தோன்றியதால் அவரும் அந்த அரசனை சந்தித்து இதைப்பற்றி கேட்க விரும்பினார் . அவருக்கு தன்னுடைய அண்ணனால் முடியாவிட்டாலும் தானாவது அந்த இளவரசியை கண்டுபிடித்து அவளை மணமுடித்து , 

தனது சகோதரனையும் அங்கிருந்து அழைத்துச் செல்லலாம் என்று எண்ணி அரசனது நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு இளவரசியை அரண்மனையில் தேடத் தொடங்கினார் . துரதிர்ஷ்டவசமாக அவராலும் எட்டு நாட்களுக்குள் இளவரசியை கண்டுபிடிக்க முடியாததால், 

அவருடைய அண்ணனுக்கு கிடைத்த அதே மரண தண்டனை இவருக்கும் கிடைத்தது .

 

(இது ஒரு இத்தாலிய பழக்கதையை தழுவி எழுதப்பட்டது)


No comments:

Post a Comment