Showing posts with label Tamil Translation. Show all posts
Showing posts with label Tamil Translation. Show all posts

Wednesday, October 16, 2024

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் பாகம் 4

 


 சாங் உண்மையில் அந்த தேவதையின் அருமை மகன்.  தன்னுடைய பறக்கும் குதிரையில் ஏறிக்கொண்டார் . அவருடைய மனைவிக்கு அவர் பயணம் செய்ய ஒரு அருமையான பல்லக்கு தயாரானது.  அவர்கள் அவர்களை காக்கும் தேவதையை சந்திக்க மலையின் மீது ஏறி சென்றனர் .

 

பிறகு மாலையில் அவர்கள் திரும்பி வந்து சர்வீயின் மகனை சந்தித்தனர் .

 

சிறிது நாட்களுக்குப் பிறகு சர்வீயின் மகன் சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருக்கு ஏராளமான பொருள்களை கொடுத்து,  அனுப்பி வைத்தனர் . அதில் எண்பது சவரன் நகையும் , ஒரு தொப்பியும் இருந்தது.  அதை கொடுக்கும் போது சாங் சர்வீயின்  மகனிடம் “ உங்களுக்கு எப்பொழுது பணம் வேண்டும் என்றாலும் உங்கள் நகரில் உள்ள வாங்கின் மருத்துவமனைக்கு சென்று இந்த தொப்பியை காண்பித்து , தங்களுக்கு வேண்டிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.  என்று கூறினார்.

 

இதன் பிறகு அவரை இங்கு அழைத்து வந்த இடையர் சிறுவன் சர்வீயின் மகனை திரும்ப அழைத்துச் சென்றார் .

 

இங்கு நடந்தவற்றை சர்வேயின் மகன் கூறும் போது , எல்லோரும் சாங் ஒரு மகான் , அல்லது சர்வீயின் மகன் ஒரு கற்பனையான கதையை கூறுகிறார் என்று நினைத்தனர்.  இதனிடையில் சாங் கொடுத்த பணம் சர்வீ இன் மகன் செலவிற்கு ஆறு வருடங்கள் வரை நீடித்தது.  அது முடிந்தவுடன் சர்வீயின் மகன் அந்த ஊரில் இருந்த வாங்கின் மருந்து கடைக்கு சென்றார் . அங்கு இருந்த கடையின் சொந்தக்காரர் வாங் இவர் கையில் இருந்த தொப்பியை உற்றுப் பார்த்தார்.  அப்பொழுது அங்கு வந்த விங்கின் மகள் , “இந்த தொப்பியை நான் சாங்கிற்காக தயார் செய்து கொடுத்தேன் . இதன் உள்ளே ஒரு சிவப்பு நாடா இருக்கிறதா என்று பாருங்கள்”  என்று தன் தந்தையிடம் கூறினார் . அப்படி பார்த்த போது உண்மையில் அதில் உள்ளே ஒரு சிவப்பு நாடா இருந்தது தெரிந்தது . அதை பார்த்தவுடன் வாங்கும் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சர்வீ இன் மகனிடம் கொடுத்தார் . அதை எடுத்துக் கொண்டு  சர்வீயின் மகன் சாங்கை தேடிக் கொண்டு சென்றார் . ஆனால் அவரை எங்கும் காண முடியவில்லை . உடனே எல்லோரும் சாங் உண்மையிலேயே ஒரு பெரிய முனிவரும் ஞானியும் என்று முடிவு செய்தனர்.

பாகம் நான்கு முடிந்தது

 

இது ஒரு சீன பழங்கதையை தழுவி எழுதப்பட்டது

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் பாகம் 3

  

வருடங்கள் பல கழிந்தன.  சர்வீக்கு தன் மகளைப் பற்றியோ,  சாங்கை பற்றியோ எந்த விதமான விபரமும் தெரியவில்லை.  ஆனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் தன் மகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது . ஆகவே தன்னுடைய மகனை அழைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் , எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து வருமாறு கூறினார் .

அவ்வாறே அவருடைய மகனும் வெகு தூரம் சென்று  அவர்களை தேடத் தொடங்கினார்.  ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனை  சந்தித்தார் . அந்த சிறுவனிடம்”  உனக்கு சாங்கும்,  அவர் மனைவியும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா? “  என்று கேட்டார் . அதற்கு அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் “ அவர்கள் இருக்கும் கிராமம் அருகில் தான் இருக்கிறது.  நான் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்”  என்று கூறினார்.  காடு மலை தாண்டி வெகுதூரத்தில் அவர்கள் ஒரு இடத்தை அடைந்தனர்.  பசுமையான மரங்கள் அடர்ந்த சோலையில்,  ஒரு வீடும் அதைச் சுற்றி பெரிய கோட்டையும் இருந்தது.  இங்கு தான் சாங்கும் அவர் மனைவியும் இருந்தனர் .  அந்த இடத்தில் ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தனர்.  அவர்களில்  ஒருவன் சர்வீயின் மகனை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். அங்கு சர்வீயின் மகன் ஒரு இளமையான பணக்கார தோற்றத்துடன் ஒருவர் இருப்பதை பார்த்தார்.   உற்றுப் பார்த்தால் தெரிந்தது , அவர் சாங்  என்று.  சர்வீயின் மகனை மிகவும் கௌரவத்துடன் உள்ளே அழைத்த  சாங்,  “ உன்னுடைய சகோதரி உள்ளே தலைவாரிக் கொண்டிருக்கிறாள் . இப்பொழுது உன்னை பார்க்க வருவாள்”  என்று கூறினார்.  சிறிது நேரத்திற்கு பிறகு சர்வீயின் மகனை ஒரு பெரிய அறைக்குள் அழைத்துச் சென்றனர்.  அங்கு சந்தன மரத்தால் ஆன பெரிய பெரிய தூண்கள் , சந்தனத்தால் ஆன ஜன்னல்கள் இருந்த ஒரு பெரிய அறையில்,  அவனுடைய சகோதரி ஒரு ராஜகுமாரி போல் அமர்ந்திருந்தார் . அவள் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் அழகாகவும் பணக்காரத்தனமாகவும் இருந்தது . ஆனால் அவள் தன் சகோதரனை அழைத்ததில் , அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை . பெயரளவிற்கு தன் பெற்றோர்களை பற்றி விசாரித்துவிட்டு,  வேலைக்காரர்களிடம் தன் சகோதரனுக்கு ஒரு அறையை ஏற்பாடு செய்துவிட்டு , அவனை அங்கே தங்கச் செய்தனர்.  பிறகு அவர்கள் இருவரும் அருகில் இருந்த மலையின் உச்சியில் இருந்த ஒரு தேவதையை பார்க்க தனியாக சென்றனர்.

 

 பாகம் 3 முடிந்தது .

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - பகுதி இரண்டு


அடுத்த நாள் சர்வீக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது . சாங் அவருடைய வீட்டிற்கு அவர் கூறிய தங்கத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் . சர்வீக்கும் அவருடைய மனைவிக்கும் தாங்க முடியாத அதிர்ச்சியாக இருந்தது.  என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர் . ஆனால் சர்வீயின்  பெண் “சாங்கிற்கு நாம் வாக்கு கொடுத்து விட்டதால் நிச்சயம் அவருக்கு என்னை மணமுடித்துக் கொடுக்க வேண்டும்.  நம் வாக்கை நாம்  மாற்ற முடியாது”  என்று கூறினார் . சர்வீக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  இருவருக்கும் திருமணம் முடிந்ததும் , அவர்கள் அந்த ஊரிலேயே இருந்தனர் . சாங்கும் பழைய படியே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அவருடைய மனைவியும் அவருக்கு தோட்டத்தில் எல்லாவிதமான உதவியும் செய்ததுடன் சமையலறையும் அவரே கவனித்துக் கொண்டார்.  இப்படி சிறிது நாட்கள் சென்ற பிறகு சர்வீயின் உறவினர் ஒருவர் வந்து “ தாங்கள் தங்கள் மகளை இப்படி ஒரு முதிய தோட்டக்காரருக்கு மணமுடித்துக் கொடுத்தது மிகவும் துரதிர்ஷ்டமானது . குறைந்த பட்சம் அவரை இந்த ஊரில் இருந்து துரத்தி விடுங்கள் “ என்று அறிவுரை கூறினார் . சர்வீ  சாங்கையும் தன்னுடைய பெண்ணையும் ஒரு விருந்துக்கு அழைத்து , அவர்கள் இந்த ஊரில் இருப்பதால் தனக்கு தர்ம சங்கடமாக இருப்பதினால்,  அவரை ஊரை விட்டு சென்று விடுமாறு கூறினார் . இதைக் கேட்டவுடன் சாங்கிற்கு வியப்பாக இருந்தது . “ உங்கள் மகள் உங்கள் அருகில் இருப்பதை நீங்கள் விரும்புவீர்கள் என்று நினைத்தேன் “ என்று கூறினார் . ஆனாலும் “ தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நாங்கள் நாளைக்கு வேறு இடத்திற்கு சென்று விடுகிறோம் “ என்று கூறி விடை பெற்றார்.

 பாகம் 2 முடிந்தது

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் பகுதி 1

 

இன்று நாம் பார்க்கப் போகும் கதை சீனாவின் பழங் கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

இது ஒரு முதிய தோட்டக்காரர் ஒருவரின் கதை.  அவர் பெயர் சாங் . அவருக்கு அடுத்த வீட்டில் சர் வீ  என்ற ஒரு பணக்கார,  அதிகாரம் மிக்க ஒருவர்,  குடியிருந்தார் சர்வீ தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார் . இதை கேட்ட முதியவர் சாங்கிற்கு,  அவளை மணம் முடிக்க வேண்டும் என்று தோன்றியது . ஆகவே அந்த ஊரில் இருந்த ஒரு பெண  திருமணத்தரகரை  அணுகினார் . அந்த பெண்ணிடம்  சர்வீயிடம் சென்று தனக்கு அவரது பெண்ணை மணம் முடித்து கொடுக்குமாறு கேட்கச் சொன்னார் .  அந்தப் பெண் சாங்கை திட்டி விட்டு, “ உன் வயது என்ன,  அந்தப் பெண்ணின் வயது என்ன,  என்று எண்ணாமல் எப்படி என்னிடம் இதை செய்யச் சொல்கிறாய்”  என்று கேட்டு அங்கிருந்து சென்று விட்டார்.  மறுநாள் சாங் அந்த மணத் தரகரை அழைத்து ஒரு பெரிய விருந்து வைத்து,  அவருக்கு ஏராளமான பணத்தையும் கொடுத்து,  மறுபடியும் சர்வீ யின் பெண்ணை தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு வேண்டினார்.  அதற்கு மறுத்த அந்த தரகரிடம்”  நீ சர்வீயிடம் சென்று என் ஆசையை கூறு.  ,அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் அப்படியே விட்டு விடலாம் “ என்று கூறினார் . அந்த மணத்தரகரும் சாங்கிடம் பணம் பெற்று இருந்ததால்,  வேறு வழி இல்லாமல் சர்வீ இடம் சென்று பேசுவதாக கூறினார் . சர்வீ தன்னிடம் மிகவும் கோபமாக பேசுவார் என்று அவளுக்குத் தெரியும் . ஆனாலும் வேறு வழி இல்லாமல் சர்வீயிடம் சென்று முதியவர் சாங்ன் ஆசையை கூறினார் . இதை கேட்டவுடன் சர்வீக்கு அடக்க முடியாத கோபம் வந்தது . ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு,  நிச்சயம் சாங்கால் செய்ய முடியாது என்று தெரிந்தும் அவரிடம்”  இரண்டு மரகத அணிகலன்களும் , நானூறு பவுன் நகையும் கொடுத்தால் , என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்”  என்று கூறினார்.  சர்வீக்கு நிச்சயம் தெரியும்,  இது சாங்கால் முடியாத காரியம் என்று.

 பகுதி ஒன்று முடிந்தது

Sunday, August 18, 2024

ஏழு குதிரை குட்டிகள் பகுதி 5



குதிரை குட்டிகளை வியப்புடன் பார்த்த அந்த மூன்றாவது மகனிடம் “  நாங்கள் உண்மையில் குதிரை குட்டிகள் இல்லை.  நீ மணக்க போகும் இளவரசியின்  சகோதரர்கள்.  நீ மன்னரிடம் நாங்கள் என்ன சாப்பிட்டோம் , என்ன குடித்தோம்,  என்று கூறினால் அவர் இளவரசியை உனக்கு மணமுடித்து வைப்பார்.  அந்த மணவிழாவில்,  நீ நாங்கள் என்ன சாப்பிட்டோம் என்ன குடித்தோம் என்று மன்னரிடம் கூறும் போது எங்களை பிடித்த இந்த சாபம் நீங்கி”  நாங்கள் எங்கள் சுய உருவை பெற்று திரும்பவும் இளவரசர்களாக வலம் வரலாம்.  நீ எங்களை இந்த கத்தியால் கொன்றவுடன் எங்கள் சாபம் நீங்கி நாங்கள் திரும்பவும் எங்கள் சுய உருவை பெறுவோம்.”  என்று கூறின . இதற்கு சம்மதித்த மூன்றாவது மகன் , அந்த குதிரை குட்டிகளின் ஒன்றின் மேல் சவாரி செய்து அரண்மனையை அடைவதற்கு முன் ஒரு பெரிய நதியை கண்டனர் . அந்த நதியின் பாலத்தைக் கடந்து அவர்கள் ஒரு சர்ச்சை அடைந்தனர் . சர்ச்சுக்குள் நுழைந்தவுடன் அவர்கள் அங்கு இருந்த ரொட்டியையும்,  மதுவையும் அருந்தினர்.  மூன்றாவது மகனும் அவர்கள் உண்ட ரொட்டியையும் மதுவையும் தன் கையில் எடுத்துக் கொண்டார்.  அவர்கள் திரும்பி வந்த வேகத்தில் அந்த வழியில் நின்று கொண்டிருந்த மூதாட்டி  கத்திக்கூப்பிடுவதை கண்டுகொள்ள கூட மூன்றாவது மகனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை . அந்த கிழவி இவர்கள் சாபம் முடியக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டவள். அரண்மனைக்கு சென்றவுடன் மன்னரிடம் மூன்றாவது மகன் , இவர்கள் சாப்பிட்ட ரொட்டித் துண்டையும் மதுவையும் காண்பித்தவுடன்,  மன்னர் மனம் மகிழ்ந்து அவரை அந்த குதிரை குட்டிகளை வாளால் வெட்ட அனுமதித்தார் . வெட்டியவுடன் , அவர்கள் தம் பழைய உருவான ராஜகுமாரர்களாக மாறினர் . பெரு மகிழ்ச்சி அடைந்த மன்னர்,  தன் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்ததுடன்,  ராஜ்ஜியத்தையும் அவனுக்கே கொடுத்தார் . ஏனென்றால் அவருக்குத் தெரியும் தன் ஏழு மகன்களும் அவர்கள் திறமையால் அவரவர்களுக்கு ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள் என்று . 

பகுதி 5 நிறைவடைந்து கதை முடிந்தது. 


 (இது ஒரு நார்வீஜியன் பழங்கதையை தழுவி எழுதப்பட்டது)


ஏழு குதிரை குட்டிகள் பகுதி 4

 


மற்ற இரு மகன்கள் போலவே இவரும் அந்த மன்னனின்  நிபந்தனைகளை ஏற்று அந்த வேலையில் சேர்ந்தார் . அடுத்த நாள் காலையில் குதிரைலாயத்தின் காவலன் அந்த ஏழு குதிரை குட்டிகளையும் வெளியே அவிழ்த்து அனுப்பினார்.  மூன்றாவது மகனும் அவைகளின் பின் ஓடினார் . ஆனால் ஒரே வித்தியாசம் இவர் அந்த கிழவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.  அந்த மூதாட்டி இவரிடமும்”  வா இங்கு வந்து உட்கார், உன் களைப்பு தீர நான் உனக்கு தலையை கோதி விடுகிறேன் “ என்று கூறினார் . அதற்கு மூன்றாவது மகன் “ நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வாருங்கள்”  என்று கூறி கடைசியில் சென்று கொண்டிருந்த குதிரை குட்டியின்  வாலை இருக்க பற்றிக் கொண்டார். “  என்னிடம் இப்பொழுது உங்களிடம் வருவதற்கு நேரம் இல்லை”  என்று கூறியபடி அந்த குதிரை குட்டியின்  வாலை  இறுகப்பற்றிக் கொண்டு,  அதன் பின் ஓடினார்.  அந்த பாறையை தாண்டியவுடன் அந்த குதிரை குட்டி இவரைப் பார்த்து “ என் வாலை விட்டு விட்டு என் மீது அமர்ந்து கொள் . நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் “ என்று கூறியது . மூன்றாவது மகனும் அது கூறியபடியே அதன் மீது அமர்ந்து பயணத்தை தொடங்கினார் . அப்பொழுது அந்த குதிரைக்குட்டி வெகுதூரம் சென்ற பிறகு, “  இப்பொழுது உன்னால் எதையேனும் காண முடிகிறதா “ என்று கேட்டது . அவர் “இல்லை”  என்று தலை அசைத்தவுடன்,  அது இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தது.  மூன்றாவது முறையாக,  வெகு தூரம் சென்ற பிறகு அந்த குதிரை குட்டி அதே கேள்வியை கேட்டவுடன் “ ஒரு பெரிய புளியமரம் என் கண்களுக்கு தெரிகிறது”  என்று கூறினார். ஓடிக்கொண்டிருந்த குதிரை குட்டிகளின் பெரிய குதிரை,  அந்த மரத்திலிருந்து ஒரு பெரிய கிளையை முறித்தது . அதன் பிளவில் ஒரு பெரிய வாள் தொங்கிக் கொண்டிருந்தது.  அந்த வாளை  சாம்பலால்  முதலில் சரியாக பிடிக்க முடியவில்லை . ஆனால் அவன் அமர்ந்திருந்த குதிரை குட்டி அவரை திரும்பத் திரும்ப அந்தக் கத்தியை சரியாக பிடிக்கும்படி,  பிடிக்கும் வரை வற்புறுத்திக் கொண்டிருந்தது . 


இப்பொழுது அந்தக் குதிரை குட்டிகள் எல்லாம் சேர்ந்து “ இப்பொழுது உன்னால் இந்த  வாளை  சரியாக பிடிக்க முடிவதால்,  நீ இளவரசியை மணக்கும் நாளில் , எங்கள் ஏழு பேரையும்  இந்த வாளால் கொல்ல வேண்டி இருக்கும்”  என கூறின. 


 பகுதி நான்கு நிறைவு


( இது ஒரு நார்வீஜியன்  பழங் கதையை தழுவி எழுதப்பட்டது.)


ஏழு குதிரை குட்டிகள் பகுதி 3



மூத்த மகன் மிகவும் அடிபட்டு திரும்பி வந்தவுடன் அவரால் வீட்டில் எதையும் கூற முடியவில்லை.  ஏனென்றால் அவருக்கு கிடைத்த தண்டனை அந்த மாதிரி இருந்தது . இரண்டாவது மகன், மூத்த மகன் திரும்பி வந்ததை பார்த்தவுடன் , தான் வெளியே சென்று சம்பாதித்து வரவேண்டும் என்று எண்ணினார்.   தன் மூத்த சகோதரனின் நிலையைக் கண்டும் அவர் மனம் தளரவில்லை . ஆகவே தன் தந்தையிடம் சென்று தான் வெளியில்  சென்று செல்வத்தை சேர்த்து வருவதாக கூறி,  வெளியே செல்ல அனுமதி கோரினார்.  முதலில் தயங்கினாலும்,  பிறகு தம்முடைய ஏழ்மை நிலையை நினைத்து தந்தை அதற்கு சம்மதித்தார் . 

ஆகவே இரண்டாவது மகனும் வெகு தூரம் நடந்து அதே அரண்மனையின் வாயிலை அடைந்தார் . இப்பொழுதும் அரண்மனை வாயிலில் நின்றிருந்த மன்னர் இவனைப் பார்த்தார்.  மூத்த மகனுக்கு நடந்தது போலவே அனைத்தும் இரண்டாவது மகனுக்கும் நடந்தது.  இரண்டாவது மகனையும் அந்த ஏழு குதிரை குட்டிகளும் என்ன சாப்பிடுகின்றன என்ன குடிக்கின்றன என்று கண்டறிவது தான் வேலை என்று கூறியவுடன் இரண்டாவது மகனும் அதற்கு சம்மதித்து சென்றார்.  முதல் மகனுக்கு நடந்த அவ்வளவும் இவருக்கும் அந்த மூதாட்டி வழியாக நடந்தது . அவரைப் போலவே இரண்டாவது மகனும் கடுமையாக தண்டிக்கப்பட்டு வீடு திரும்பினார். 


இப்பொழுது,  நமது கதாநாயகன் மூன்றாவது மகன் சாம்பல் தன் இரண்டு மூத்த சகோதரர்களுக்கும் நடந்த விஷயங்களை அறிந்து கொண்டார்.  “நான் அந்த ஏழு குதிரை குட்டிகளை கவனித்து அதை மன்னனிடம் கூறி நிச்சயம் பரிசை பெற்று வருவேன்”  என்று கூறினார் . அதை கூறியவுடன் அவருடைய மூத்த சகோதரர்கள் அவனை எள்ளி நகையாடினர் . அப்பொழுதும் மனம் தளராத மூன்றாவது மகன் அந்த செல்வத்தை நோக்கி தன் பயணத்தை தொடங்கினார். 

 பகுதி மூன்று நிறைவு

( இது ஒரு நார் வீஜியன் பழங்கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)


ஏழு குதிரை குட்டிகள் பகுதி இரண்டு

 


இப்படி ஓடிக்களைத்த மூத்த மகன் ஒரு பெரிய பாறையின் இடுக்கில் ஒரு மூதாட்டி அமர்ந்து நூல் நூற்றுக் கொண்டிருப்பதை கண்டார் . அந்த மூதாட்டி அந்த மூத்த மகனை அருகில் அழைத்து “சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள் இப்படி மூச்சு முட்ட அதன் பின்னால் நீ ஓட வேண்டிய அவசியம் இல்லை.  என் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்.  உன் களைப்பு தீர நான் உன் தலையை கோதி விடுகிறேன்.” என்று அன்புடன் கூறினார்.  மூத்த மகனும் மிகவும் களைப்பாக இருந்ததால் அங்கேயே அமர்ந்து விட்டார்.  அவருக்கு அந்த குதிரை குட்டிகள் எங்கே சென்றன , என்ன சாப்பிட்டன , என்பதை பற்றி எதுவும் தெரியவில்லை.  அதனால் அந்த மூதாட்டி இடம் “ என்னால் அந்த குதிரை குட்டிகள் என்ன சாப்பிட்டன , என்ன அருந்தின , என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  ஆகவே நான் அரண்மனைக்கு திரும்பச் செல்லாமல் என் வீட்டிற்கு சென்று விடுகிறேன் “ என்று கூறினார்.  அதற்கு அந்த மூதாட்டி “ பொழுது சாய்ந்த உடன் அவைகள் இந்த வழியாகத்தான் அரண்மனைக்கு திரும்பும் . அப்பொழுது நீயும் அவைகளுடன் அரண்மனைக்கு சென்று விடு”  என்று கூறினார் . அதற்கு அந்த மூத்த மகன் “ மன்னர் என்னிடம் இவை என்ன சாப்பிட்டன,  என்ன குடித்தனர் , என்று கேட்டால் நான் என்ன செய்வேன்”  என்று கேட்டார் . அதற்கு அந்த மூதாட்டி ஒரு பாட்டிலில் தண்ணீரும்,  சில பாசி கள் இருந்த உணவையும் கொடுத்து , மன்னரிடம் இதை தான் அவை உண்டன என்று சொல்லி கொடுத்துவிடு.  அவர் நம்புவார்”  என்று கூறினார்.  அவர் கூறியபடியே மூத்த மகனும் அரண்மனைக்குத் திரும்பி மன்னரிடம் கூறியவுடன் மன்னருக்கு இவர் கூறிய பொய் புரிந்து விட்டது . அதற்கு உண்டான கடுமையான தண்டனையை அவனுக்கு கொடுத்து விட்டு,  வீட்டிற்கு அனுப்பி விட்டார்


 பகுதி இரண்டு நிறைவடைந்தது.


(இது ஒரு நார்வீஜியன்  பழங் கதையை  தழுவி எழுதப்பட்டது .


ஏழு குதிரை குட்டிகள் பகுதி ஒன்று



ஒரு ஊரில் பரம ஏழைகளான ஒரு தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர்.  அதில் மூன்றாவது மகனுக்கு பெயர் மிகவும் புதுமையாக இருந்தது . அவன் பெயரே  சாம்பல் பையன்.   இந்த பெயர் அவனுக்கு வந்ததற்கு காரணம் அவன் வேறு எந்த வேலையும் செய்யாமல்,  எப்பொழுதும் சாம்பலை கிளறிக் கொண்டிருந்தது தான் .  இப்படி இருக்கையில் ஒரு நாள் மூத்த மகன்,  தன் தந்தையை அணுகி தான் வெளி உலகத்திற்கு சென்று சம்பாதிக்கப் போவதாக கூறினார் . தந்தையும் சம்மதித்தார் . வெகுதூரம் நடந்த மூத்த மகன் ஒரு அரண்மனை வாயிலை அடைந்தார்.  அந்த அரண்மனையின் மன்னர் அரண்மனை வாயிலில்  நின்று கொண்டிருந்தார் . அந்த மூத்த மகனை பார்த்து “ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் “ என்று கேட்டார் . அதற்கு அவர் “  நான் ஒரு வேலை தேடி சென்று கொண்டிருக்கிறேன்”  என்று கூறினார் . அதற்கு அந்த மன்னர் “  நீ என்னுடைய ஏழு குதிரை குட்டிகளை கவனித்துக் கொள்ள சம்மதமா? ”  என்று கேட்டார் . மூத்த மகன் அதிசயத்தில் “ குதிரை குட்டிகளையா”   என்று கேட்டார்.

 “ ஆம்”என்று தலை அசைத்த மன்னர் “ உன்னுடைய வேலை தினமும் காலையில் அவிழ்த்து விடும் அந்த ஏழு குதிரை குட்டிகளுடன் சென்று என்ன சாப்பிடுகின்றன,  என்ன குடிக்கின்றன , என்பதை அறிந்து எனக்குச் சொல்ல வேண்டும் அப்படி நீ செய்தால் உனக்கு என் மகளை மணம் முடித்துக் கொடுப்பதுடன் என் ராஜ்யத்தில் பாதியை கொடுப்பேன்”  என்று கூறியவுடன் மூத்த மகனின் வாய் அடைத்து விட்டது.  மன்னர் “  ஒரே ஒரு நிபந்தனை.  நீ அதை சரியாக செய்யாவிட்டால்,  கடுமையாக தண்டிக்கப்படுவாய் . சரி , என்றால் இப்பொழுதே வேலையில் சேரலாம் “   என்று கூறியவுடன் மூத்த மகன் சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடிப் போனார்.  உடனே இதற்கு சம்மதித்தார் . மறுநாள் காலையில் குதிரை லாயத்தின் தலைவன் , அரண்மனை லாயத்தில் இருந்த ஏழு குதிரை குட்டிகளையும் அவிழ்த்து விட்டார் . அவைகள் காடு மலைகளை த்தாண்டி வெகு வேகமாக,  வெகு தூரம் ஓடத் தொடங்கின.  ஆனால் சீக்கிரமே அந்த மூத்த மகன் களைப்படைந்து நின்று விட்டார். 

பகுதி ஒன்று நிறைவு

 (இது ஒரு நார்வீஜியன் நாட்டின் பழங்கதைகளை தழுவி எழுதப்பட்டது)


மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 4

 

இந்த சன்னியாசியின் மதிக்கூர்மைக்கும்  தீர்க்கதரிசனத்திற்கு அந்த பயிற்சியாளர் அடிமையானார் . அந்த யானை எங்கே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயத்தையும் கூறினார் .

அன்று இரவு மந்திரி மந்திர குப்தா,  ஒரு மூங்கிலை எடுத்து அதில் துளையிட்டு ஒரு விஷப் பாம்பை அதில் அடக்கினார் . அந்த சன்னியாசியின் உதவிக்கு நன்றி கூறும் விதமாக , அன்று அந்தப் பயிற்சியாளர் சன்னியாசிக்கு ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார் .

அந்த பயிற்சியாளரும் அவர் மனைவியும் விருந்திற்கு ஏற்பாடு  செய்து கொண்டிருக்கும் போது,  மந்திர குப்தா உள்ளே சென்று அந்த யானை இருக்கும் இடத்தில் , அந்த பாம்புடன் இருக்கும் மூங்கிலை வைத்துவிட்டு திரும்பி வந்தார்.  விருந்து முடிந்தவுடன் எதுவுமே நடப்பது போல் அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார் . அந்த ராஜ்ஜியத்தை விட்டு தன்னுடைய நாட்டுக்கு திரும்பி வந்து விட்டார் .

 

அன்று இரவே அவர் அங்கு யானையின் அருகில் வைத்துவிட்ட மூங்கிலில் இருந்து வெளியே வந்த பாம்பு அந்த யானையை தீண்டியது . மறுநாள் அந்த பயிற்சியாளரும் மன்னரும் பாம்பு  தீண்டி அந்த யானை இறந்திருப்பதை கண்டு மிகுந்த வருத்தமடைந்தனர்.

மந்திரி மந்திர குப்தா திரும்பி வந்தவுடன் , மன்னர் பத்திரபாகு விடம் சென்று “இப்பொழுது தாங்கள் வாரணாசி மன்னரிடம் சென்று அவரது மகள் அனங்க லீலாவை மணமுடித்து வைக்கும் படி கேளுங்கள் அவர் மறுக்க மாட்டார்”  என்று கூறினார் . அதன்படியே அவரிடம் சென்று அனங்க லீலாவை தனக்கு மணமுடித்துக் கொடுக்கும்படி கேட்டார்.  இப்பொழுது யானையின் பலம் இல்லாத வாரணாசி மன்னனும் வேறு வழியில்லாமல் , மணமுடித்து வைத்தார் .

பகுதி நான்குடன் கதை  நிறைவு .

 

(இந்த கதை கதா சரித் சாகரா என்ற நூலில் இருந்து தழுவி எழுதப்பட்டது)

Saturday, August 17, 2024

மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 3

 


 

மறுநாள் அந்த மந்திரியின் தொண்டர்கள்,  அந்த யானை பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்ற பொழுது மனைவியை காணாத அதிர்ச்சியில் அவர் விஷம் உட்கொண்டு தவிப்பதை கவனித்தார்கள்.  உடனே அவருக்கு தகுந்த மருத்துவம் பார்த்து, “  நீங்கள் எங்கள் குருவை சரணடைந்தால் அவர் உங்கள் மனைவியை எப்படியும் கண்டுபிடித்து கொடுப்பார் உங்கள் விஷத்தை முறிக்கும் சக்தி அவருக்கு உண்டு”  என்று கூறி அவரை தங்கள் குருவை அணுகும் படி கூறினர் . “ உங்கள் கஷ்டம் என்ன என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் யாரும் கூறாமலேயே எங்கள் குருவிற்கு எல்லாம் தெரியும் ஆகவே நீங்கள் எங்களுடன் வாருங்கள்”  என்று கூறி அந்த மதி மந்திரி இடம் அழைத்துச் சென்றனர் .

அங்கு சென்றதும் அந்த மதி மந்திரி யானை பயிற்சியாளரை பார்த்து “ “ உங்கள் துக்கம் உங்களை பார்த்தவுடனேயே எனக்கு தெரிந்து விட்டது.  உங்களுடைய பிரச்சனை என்னால் எளிதாக தீர்த்து வைக்க முடியும்.  தாங்கள் தங்கள் மனைவியை காணவில்லை என்று வருத்தத்துடன் இருக்கிறீர்கள்”  என்று கூறியவுடன் யானை பயிற்சியாளர் குரல் தழுதழுக்க “ ஆம் ஐயா,  அதுதான் என் பிரச்சினை “ என்று கூறினார்.  இதைக் கூறியவுடன் அந்த மந்திரி ஏதோ தியானத்தில் அமர்ந்தவர் போல் யோசித்து விட்டு , “ உன் மனைவியை அவள் விருப்பத்திற்கு எதிராக சிலர் இந்த ராஜ்ஜியத்திலேயே ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்”  என்று கூறியவுடன் அந்த குருவின் தீர்க்கதரிசனத்தை யானை பயிற்சியாளர் வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார் . அவர் வியப்பு கலையும் முன்னே அந்த சன்னியாசி அவர் மனைவி இருக்கும் இடத்தை விளக்கமாக எடுத்து கூறினார் . அவருக்கு நன்றி கூறிவிட்டு பயிற்சியாளரும் அரண்மனை காவலர்களை அழித்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்று தன் மனைவியை மீட்டு வந்தார்.  இதனால் அந்த பயிற்சியாளருக்கு அடைந்த  சந்தோஷமும் வியப்பும் அளவில் அடங்காததாக இருந்தது . தன் மனைவி வீட்டுக்கு எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் திரும்பி வந்ததற்கு அந்த குருவும்,  சன்னியாசியுமான அந்த மனிதரே காரணம் என்று அவர் நம்பினார்.  திரும்பத் திரும்ப அவருக்கு நன்றி கூறினார்.

 பகுதி மூன்று நிறைவு

 

(இந்த கதை கதா சரித் சாகரா என்ற நூலை தழுவி எழுதப்பட்டது)

மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 1

 

மகத தேசத்தின்  மன்னன் பத்திரபாகு . அவனின் மதி மந்திரி மந்திர குப்தா . மந்திர குப்தா ஒரு திறமையான மந்திரியாக திகழ்ந்தார் . ஒரு நாள் தனது மன்னர் மிகவும் வருத்தத்துடன் இருப்பதை அவர் கவனித்தார் . “மன்னா தங்கள் முகம் ஏன் இப்படி வாடி இருக்கிறது”  என்று கேட்டார்.

 ஒரு பெருமூச்சுடன் அவர்

  “ வாரணாசியின் மன்னன் தர்ம கோபனுக்கு ஒரு மகள் இருக்கிறார் . அவள் பெயர் அனங்க லீலா . அவள் அழகிற்கு ஈடு இணை இந்த மூவுலகிலும் இல்லை”  என்று கூறி இன்னொரு பெருமூச்சு விட்டார் . உடனே மந்திரி  “அவளை நீங்கள்  மணக்க விரும்புகிறீர்களா”  என்று கேட்டார் . மன்னனும் “ நிறைய தடவை நான் அவரிடம்  அனங்க லீலாவை எனக்கு மணமுடித்து கொடுக்கும்படி கேட்டுவிட்டேன் ஆனால் அவர் என் மேல் இருக்கும் கோபத்தால் மறுத்துவிட்டார்” என்றதும் , மந்திரி மிகவும் ஆச்சரியத்துடன் “ இவ்வளவு படை பலத்துடன் இருக்கும் உங்களுக்கு அவர் மகளை மணம் முடித்துக் கொடுக்க ஏன் மறுக்கிறார்”  என்று கேட்டார்.  அதற்கு மன்னன்”  தர்ம கோபனிடம் ஒரு யானை இருக்கிறது அதன் பெயர்

 பத்ரதந்தா.  அந்த ஒரு யானை படையில் இருப்பதால்,  அந்த மன்னனை எவ்வளவு தைரியமான , படை பலத்துடன்   படையெடுத்து வந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்ற துணிச்சலில் அவர் எனக்கு அவர் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க மறுக்கிறார் . எனக்கும் அனங்க லீலாவுக்கும் மணமுடிப்பதில் இருக்கும் பிரச்சனையே அந்த யானை தான்”  என்று கூறி முடித்தார். 

 

“ அந்த யானையைப் பற்றி தெரிந்த எல்லோருக்கும் தெரியும் அந்த யானை ஒன்றே எவ்வளவு பெரிய படை பலத்துடன் யார் வந்தாலும் வெற்றியை தனது மன்னர் பக்கம் கொடுக்கும் என்று . அந்த மமதையில் தான் அவர் இப்படி இருக்கிறார்.  அந்த ஒரு யானையை இல்லாமல் செய்து விட்டால் நான் அனங்க லீலாவை மணப்பதை யாராலும் தடுக்க முடியாது”  என்று கூறி பெருமூச்சு விட்டார் அப்பொழுது அந்த மதி மந்திரி “ நான் இந்த விஷயத்தை பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் நிம்மதியாக இருங்கள்”  என்று கூறினார் .

பகுதி ஒன்று நிறைவு

 

(இந்தக் கதை கதா சரித்  சாகரா விலிருந்து தழுவி எழுதப்பட்டது)

விதியின் விசித்திரம் - பகுதி 3


 

அந்த கொள்ளைக்காரர்கள் வியாபாரிகளை தாக்கத் தொடங்கியவுடன் சமுத்திர சூரா எழுந்து அவர்கள் பார்க்கும் முன்,  ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் . அந்த இரவு முழுவதும் அங்கிருந்து அவர் அந்த கொள்ளையர்களை கவனித்துக் கொண்டிருந்தார் . அவர்களும் தங்களால் முடிந்த அளவு அந்த வியாபாரிகளிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் . இதையெல்லாம் சமுத்திர சூரா மரத்திலிருந்து கவனித்து கொண்டு இருந்தார் . விடிந்தவுடன் அவருக்கு  ஒரு திகைப்பான விஷயம் கண்ணில்  பட்டது.  அவர் அமர்ந்திருந்த அதே கிளையில் ஒரு பறவை கூட்டில் மிகவும் அரிதான மதிப்பு மிகுந்த நகைகள் இருந்தன.  அதில் இருந்த ஒரு நகை அந்த அரசனிடம் இருந்து கழுகு பறித்து வந்த நெக்லஸூம் இருந்தது. மனதில் சிவனைத் தொழுது,  அவன் அருளை நினைத்து மகிழ்ந்து , தன்னுடைய நாடான ஹரசபுறாவிற்கு வந்து சம்பாதித்த செல்வங்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார் . அவருக்கு விதி இருந்தால் எப்படியும் அவர் அவர்களுக்கு உண்டான செல்வ செழிப்பு வந்து சேரும் என்று இதிலிருந்து புரிந்தது .

 

(இந்த கதை சரித் கதா சாகரா என்ற இந்திய பழங் கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது) 

விதியின் விசித்திரம் பகுதி இரண்டு


சமுத்திர சூரா சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் சிவனை நினைத்து தன்னை இதிலிருந்து காக்கும்படி வேண்டினார் . அந்த சமயத்தில் அந்த நாட்டு அரசனுக்கு தன்னுடைய அரச சபையில் ஒரு குரல் ஒலித்தது . “இந்த வியாபாரி எந்தத் தவறும் செய்யவில்லை . அவன் திருடனும் இல்லை . அதை திருடியவன் இறந்தவுடன் அவனிடம் இருந்த நகையை இவர் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் . ஆகவே இவரை இதற்காக தண்டிப்பது,  ஒரு தவறு செய்யாத மனிதனை தண்டிப்பதற்கு சமம்” என்ற குரல் கேட்டது .

அப்பொழுது அந்த அரசன் தன் மகளான இளவரசியிடம் அந்த நெக்லஸை கொடுப்பதற்காக வந்து கொண்டிருந்தார்.  அப்பொழுது அந்த வழியாக பறந்து வந்த கழுகு கீழே இறங்கி அவர் கையில் இருந்து அந்த நகையை பறித்துக் கொண்டு பறந்து  சென்றது . அப்பொழுது தான் அந்த அரசனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது . தன் தவறை உணர்ந்து சமுத்திர சூராவை விடுதலை செய்து அவருக்கு நிறைய செல்வங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

 சிறிது காலம் கடந்த பிறகு சமுத்திர சூரா திரும்பவும் கப்பல் பயணம் செய்து தன் வியாபாரத்தை தொடங்கினார்.  இப்பொழுது அவர் வேறு சில வியாபாரிகளுடன் சேர்ந்து கப்பல் பயணத்தை தொடங்கினார் . அவர்கள் ஒரு புதிய நகரத்தை அடைந்தனர் . மறுநாள் , காட்டில் ஒரு இரவு அவர்கள் தங்கியிருந்தனர்.   ஒரு கொள்ளை கும்பல் அந்த வியாபாரிகளை தாக்கத் தொடங்கி அவர்களை எதிர்த்தவர்களை கொல்ல தொடங்கினர் .

(இந்த கதை கதா சரித் சாகரா என்ற இந்திய பழங்கதையை தழுவி எழுதப்பட்டது).

விதியின் விசித்திரம் - பகுதி 1

 

ஹர்சபுரா என்ற நாட்டில் ஒரு வியாபாரி இருந்தார் .அவர் பெயர் சமுத்திர சூரா . அவர் மிகவும் நல்ல குணங்கள் படைத்தவராக இருந்ததுடன் பிறருக்கு உதவும் குணங்களுடன் இருந்தார்.   அவர் ஒரு நாள் வியாபார நிமித்தமாக ஸ்வர்ணத்திவீப்பா என்ற தீவிற்கு செல்ல வேண்டி இருந்தது . அந்த தீவில் அவர் அனேக பொருள்களை விற்று நிதியை குவிக்க முடிந்தது . இதன் பிறகு அவர் தன் நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்தார் .

துரதிஷ்டவசமாக திரும்பும் போது அவருடைய கப்பல்  புயலால் கவிழ்ந்து நாசமானது . ஆனால் இது நடந்த இடம் கடற்கரையில் இருந்து சிறிது அருகில் இருந்ததால் , அவர் நீந்தி அந்தக் கரையை அடைந்தார். அங்கு கடற்கரையில் ஒரு பிணம் இருந்ததை கவனித்தார்.  அவர் யாராக இருந்தாலும் தான் சந்தித்த அதே புயல்தான் அவர் இறப்பிற்கும் காரணம் என்று கணித்தார் . அவர் அந்த இறந்த மனிதனிடம் இருக்கும் ஒரு பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு வைர நெக்லஸ் இருந்தது . சமுத்திர சூராவுக்கு அதை பார்த்து திகைப்பாக இருந்தாலும் அதை எடுத்து தன்னுடைய கப்பலில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடு செய்து கொள்ளலாம் என்று அதை தன்னிடம் வைத்துக் கொண்டார்.  அதை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நகரத்திற்கு சென்றார்.  அங்கு களைப்பினால் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கினார் . அந்த நகரின் காவலர் அந்த இடத்துக்கு வந்த போது சமுத்திர சூராவையும் அவர் பையில் இருந்த வைர நெக்லஸை  கவனித்தார்.  உடனே அந்த காவலருக்கு தெரிந்து விட்டது அந்த நாட்டின் இளவரசியான சக்கரசேனா வின் நகை அது என்று.  ஒரு திருடனை பிடித்து விட்டோம் என்ற கர்வத்தோடு சமுத்திர சூராவை அந்த நாட்டின் அரசனிடம் அந்தக் காவலன் அழைத்துச் சென்றார்.  அரசனுக்கு அந்த நகையை பார்த்தவுடன் இவன்தான் திருடன் என்று முடிவு செய்து உடனே சமுத்திர சேனாவை சிறைக்கு அனுப்பினார்.

( இந்த கதை கதா சரித சாகரா என்ற இந்திய பழங்க்கதையை தழுவி எழுதப்பட்டது)

Friday, August 16, 2024

அன்னையின் அருள் - பகுதி இரண்டு


பென்டன் சோமா அந்த பெண்ணின் பிரார்த்தனையை கேட்டு,  தன் மகன் செல்வத்தை வாறி வழங்கும் டைகுகோ வை அழைத்து ஹகூகாக என்ற அந்த  மீனவனுக்கு அருள் புரியுமாறு கூறினார்.  அதன்படியே அன்று

ஹ குகாவுக்கு ஏராளமான மீன்கள் கிடைத்தன.  அதனால் அவன் பெரும் பணக்காரனாக மாறினான்.  அவன்  அந்த ஊரில் இருந்த கல்யாண தரகரை அணுகி உமேசானின் தந்தையை அணுகி தன் திருமணத்தை அவளுடன் நடத்தி வைக்க ஏற்பாடு செய்ய கூறினார். அந்த தரகரும் உமேசானின் தந்தையை அணுகி  இப்பொழுது ஹகூகா பணக்காரனாக இருப்பதால் உன் மகளை அவனுக்கு திருமணம் முடிக்க ஏதும் தடை இல்லை என்று கூறி திருமணத்தை முடித்து

வைப்பதற்காக அணுகினார்.  ஆனால் அவள் தந்தை அந்த மீனவர்களை  கொல்லும்  முதலைகள் இறக்கும் வரை தன் மகளை எந்த ஒரு மீனவனுக்கும் மணமுடிக்க முடியாது என்று கூறினார் . தரகரும் அவர் கூறியதை ஹகு காவிடம் கூறினார்.  இதை கேட்ட  உமேசான் மறுபடியும் பென்டன் சாமாவை அணுகி இந்த முதலைகள் எங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதற்கு உன் மகன் தீரம் மிகுந்த அடேய் இடம் கூறும்படி கூறினாள்.


அன்னையின் அருள் பகுதி 1

 

நாம் இன்று பார்க்க போகும் பழங்கதை ஜப்பானிய மொழியில் வழங்குவது .

ஆகவே இதில் வரும் பெயர்கள் நமக்கு புதுமையாக இருந்தாலும் , கதையும் புதுவிதமாக இருப்பதால் எல்லோரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜப்பானின் காஷிகோயே  என்ற நதிக்கரையில் நடந்த சம்பவம் இது. அதை ஒட்டி உள்ள சதுப்பு நிலத்தில் ஐந்து பயங்கரமான பறக்கும் முதலைகள் இருந்தன.  அவை அந்த ஊரில் உள்ள இளம் பெண்களை உண்ணுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர்.  அங்கு உள்ள மனிதர்களால் இந்த முதலைகளை எதுவும் செய்ய முடியவில்லை. அந்த ஊரில் காவல் தெய்வமான பென்டன் சாமா என்ற தேவதையை  அவர்கள் நம்பியிருந்தார்கள்.  அந்த தேவதையால் மக்களுக்கு,  குறிப்பாக தாய்மார்களுக்கு அன்பு,  அழகு முதலியவற்றை கொடுக்கும் திறமை  பென்டன் சாமாவிடம் இருந்தது . பென்டன் சாமாவிற்கு நிறைய ஆண் குழந்தைகள் இருந்தன.  முதல் குழந்தை டை குகோ, செல்வங்களை மக்களுக்கு வாரி வழங்கும் தன்மை உடையது. அடுத்த மகன் ஹ டேய் மர்மங்கள் மிகுந்த மகனாக விளங்கினார்.   இன்னொரு மகன் எபிசூ,  அங்கு இருந்த மீனவர்களின் காக்கும் தெய்வமாக விளங்கினார்.

அந்த ஊரில் தலைவனின் செல்ல மகள் ஓ மே ஷான் என்ற அழகான பெண் . அவள் கடவுளிடம் தன் காதலனை கைபிடிக்க அருளும்படி வேண்டினாள் . ஆனால் அவளுடைய காதலன் ஒரு மீனவன்.  மீனவர்களை குறி வைத்து அந்த பறக்கும் முதலைகள் கொன்றதால் ஓமேஷானின் தந்தை அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.  அந்த மீனவனின் பெயர் ஹா குகா.  அவள் தந்தை முதலைகளை அழிந்தால்தான் உன்னை ஒரு மீனவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன் என்று உறுதியாக கூறினார் . அவள் பென்டன் சோமாவிடம் தன் தந்தையின் மனதை மாற்றுவதற்கு உதவுவதற்காக வேண்டினாள்.  உங்கள் மகன் எபிஷு விடம் கூறி திருமணத்திற்கு என் தந்தையை சம்மதிக்க வைக்கும் படி  வேண்டினாள்.


Tuesday, July 2, 2024

கழுகும், மண்ணை கிளறும் கோழியும் - பாகம் 2


எல்லா பறவைகளும் கோழி இடம் இருந்து ஊசியை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக பறக்க ஆரம்பித்தன.  ஒரு பறவை சிறகுகளை  தைத்துக் கொண்டு, கோழியிடம் அந்த ஊசியை திருப்பிக் கொடுக்க, அதன் வீட்டிற்கு சென்றபோது கோழி வெளியே சென்று இருந்தது.  ஆனால் அதன் குழந்தைகள் அங்கு இருந்ததால்,  அந்தப் பறவை நன்றி கூறிவிட்டு,  ஊசியை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு சென்றது. குழந்தைகள் அந்த ஊசியை வைத்துக்கொண்டு விளையாடிவிட்டு மண்ணில் போட்டுவிட்டு தூங்க சென்று விட்டன.

இதனிடையில் சிறிது நாட்கள் சென்ற பிறகு கழுகிற்கு இவ்வளவு நாள் பறந்ததால், சில சிறகுகள் விழுந்து விட்டதால், புதிதாக தைப்பதற்கு ஊசி தேவைப்பட்டது. ஆகவே அந்தக் கழுகு கோழியின் வீட்டிற்கு வந்து தன்னுடைய ஊசியை திருப்பி கேட்டது.

கோழி அங்கும் இங்கும் அதன் வீட்டில் எங்கு தேடியும் அதற்கு ஊசி கிடைக்கவில்லை.  ஆகவே வருத்தத்துடன் கழுகிடம் “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் தேடி வைக்கிறேன்.  நாளைக்கு வந்து வாங்கிக் கொண்டு உன்னுடைய  சிறகுகளை நீ தைய்த்துக் கொள்ளலாம்” என்று கூறியது. 


தன்னுடைய ஊசி தனக்கு  வேண்டும்போது கிடைக்காத கோபத்தில், அந்த கழுகு “நாளை நான் வருவேன். நீ அந்த ஊசியை திருப்பிக் கொடுக்காவிட்டால் உன்னுடைய குஞ்சுகளை எடுத்துச் சென்று  விடுவேன்”  என்று கோபமாக கூறியது . மறுநாள் கழுகு வந்து கோழியிடம் ஊசி கேட்டபோது, அது மண்ணைக் கிளறிக் கொண்டு ஊசியை தேடிக்கொண்டிருந்தது.  ஆனால் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை அது மண்ணைக் கிளறி ஊசியை தேடிக்கொண்டே இருந்தது.  அது அப்பொழுதிலிருந்து எப்பொழுதெல்லாம் கழுகு கண்ணில் படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக மண்ணைக் கிளறி ஊசியை தேடிக் கொண்டிருக்கிறது.

 இன்றைக்கும் கோழிகள் மண்ணை எப்பொழுதும் கிளறிக் கொண்டிருப்பதற்கு இதுதான் காரணமோ ?

(இந்தக் கதை ஆப்பிரிக்க பழங்கதையை தழுவி எழுதப்பட்டது)




கழுகும், மண்ணை கிளறும் கோழியும் - பாகம் 1

 

முன் காலத்தில் எந்த பறவைக்கும் பறக்கும் படி இறகுகள் அமையவில்லை . ஒரு பஞ்சகாலத்தில் ஒரு கழுகுக்கு உணவு தேடி  வெகு தூரம் அலைய வேண்டி வந்தது . நடந்தே அந்த கழுகு மிகுந்த தூரம் சென்றதால் அதற்கு கால் வலித்தது . பறக்க முடிந்தால் எவ்வளவு சீக்கிரமாக தான் அலைந்து திரிந்து உணவு தேட முடியும் என்று எண்ணியது .  சிறகு இருந்தால் இவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருக்காது என்று எண்ணியது . இப்படி எண்ணியபடியே  களைத்து போய் தரையில் தூங்க ஆரம்பித்தது.  அப்பொழுது பயணம் செய்வதற்கு ஒரு சுலபமான வழியை கண்டுபிடிக்கலாம் என்று கொஞ்சம் உரத்த குரலில் புலம்பிக் கொண்டிருந்தது. 



இதைக் கேட்ட ஒரு கோழி அதைப்பற்றி  எண்ணிக் கொண்டு அதுவும் தூங்கச் சென்றது.  கோழி மறுநாள் எழுந்து கொண்ட போது அதற்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது . தன் அருகில்,  நிறைய கீழே விழுந்து கிடந்த சிறகுகளை  பார்த்தது.

கோழிக்கு இன்னும் சிறிது சிறகுகள் இருந்தால், தன் இறகுகளில் தைத்து எளிமையாக பறக்கலாம் என்று தோன்றியது.  ஆனால் இவற்றை வைத்து தைப்பதற்கு அதனிடம்  ஊசி இல்லை . அந்த ஊரிலேயே கழுகிடம் மட்டும்தான் ஒரு ஊசி இருந்தது.  கோழி அந்த கழுகிடம் இந்த யோசனையை கூறி, ஊசியை கேட்டவுடன்,  கழுகுக்கு தானே ஏன் இதை செயல்படுத்தக் கூடாது என்று தோன்றியது.  உடனே அந்த கழுகு அருகில் இருந்த நிறைய சிறகுகளை ஒன்று சேர்த்து தன் இறகில் சேர்த்து தைத்துக்  கொண்டு பறக்க ஆரம்பித்தது . அதனால் உயர உயர பறந்து எளிதாக உணவு சேகரிக்க முடிந்தது.

கோழிக்கு தன்னுடைய யோசனை கழுகினிடம் பலித்ததால் தானும் அதனுடைய ஊசியை கடன் வாங்கி, தனக்கும் சில சிறகுகளை சேர்த்து தன் இறகில் தைத்து பறக்க முயன்றது.

உடனே அதுக்கு தெரிந்து விட்டது தன்னால் அவ்வளவு எளிதாக பறக்க முடியாது என்று. ஆனாலும் பிறகு முயற்சி செய்வதற்காக,  அந்த ஊசியை தனியாக வைத்துவிட்டு தன்னுடைய குஞ்ஜுகளுக்கு உணவு சமைக்க ஆரம்பித்தது. அந்த ஊசியைப் பற்றி அது அது மறந்து விட்டது.  ஆனால் அங்கு இருந்த மற்ற பறவைகள்,  கழுகு எளிமையாக பறப்பதை பார்த்து அந்த கோழியிடமிருந்து  ஊசியை வாங்கி தைத்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தன.  பறந்து உணவு தேடுவதன் எளிமையை அவைகள் உணர்ந்து கொண்டன.  கோழிக்கு தன்னுடைய யோசனை மீதி பறவைகளுக்கு பலித்ததில் சந்தோஷமாக இருந்தது.



(இந்த கதை ஆப்பிரிக்க பழக்கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டது)


இளவரசியும் தங்க சிங்கமும் - பாகம் 6

 

மறுநாள் காலையில் அந்த அரசன் அந்த தங்க சிங்கத்தை திரும்ப தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துச் சென்றார் . அந்தக் கிழவியும் முன்பு கூறியதைப் போல வந்து அந்த சிங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பச் சென்றார்.  மூன்றாவது மகன் சிங்கத்திடமிருந்து வெளியே வந்து அந்த கிழவிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

பிறகு அரண்மனைக்கு திரும்பி வந்து அரசன் கூறிய அந்தப் போட்டியில் தான் கலந்து கொண்ட விரும்புவதாக கூறினார்.

அந்த அரண்மனையில் மூன்றாவது மகன் தங்கியிருந்து அங்கே இங்கே சுற்றிப் பார்ப்பது போல் ஏழு நாட்கள்  நடித்துக் கொண்டிருந்தார் . அரண்மனையில் கிடைத்த உணவை உண்டு சுகமாக இருந்தார்.

எட்டாவது நாள் அந்த அரசனின் அறைக்குச் சென்று அங்கு தரையில் இருந்த செங்கற்களை அகற்ற கூறினார்.  அந்த அரசன் அதிர்ச்சி அடைந்தாலும் அந்த இளைஞன் கூறியபடி செய்தார்.  அரண்மனை அமைச்சர்களும் அருகில் இருந்த தால் அரசனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை . அவர்கள் எதிரில் அரசனால் அந்த செங்கற்களை  அகற்ற முடியாது,  என்று கூறவும் முடியவில்லை.  அரசன் முன்பு சென்ற அதே பாதையில் இளைஞன் செல்ல ஆரம்பித்தார் . படி வழியாக இறங்கி ஏழாவது கதவைத் திறந்து அங்கு உள்ள 12 அழகான பெண்களை பார்த்தார் . பின்னால் வந்து கொண்டிருந்த அரசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது . ஆனாலும் இந்த 12 பேரில் நிச்சயம் இந்த இளைஞன் தன் மகளை கண்டுபிடிக்க முடியாது என்று அந்த அரசன் நம்பினான் . ஆனால் அந்த இளைஞனோ மிகவும் சுலபமாக இளவரசியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தார் . அவருக்கு தான் தெரியுமே அந்த இளவரசி கையில் சிவப்பு கயிறை அணிந்திருந்தது .

இவ்வாறாக அந்த மூன்றாவது மகன் அந்தப் போட்டியில் வென்று அந்த இளவரசியை மணந்து,  தன்னுடைய நாட்டிற்கு அழைத்து வந்தான் . என்றாலும் அந்த இளவரசியை கண்டுபிடிக்க முடியாமல் தன் இரண்டு சகோதரர்கள் இறந்தது அவனுக்கு சிறிது வருத்தம் தான்.  ஆனாலும் தன் முயற்சியில் வெற்றி பெற்றதில் மகிழ்ந்திருந்தார்.

தனக்கு உதவி செய்த கிழவியையும் மறக்காமல் அவளுடைய மீதி வாழ்நாட்கள் சுகமாக இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார்.

இதன் பிறகு அந்த இளவரசியுடன் வெகு காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்

( இந்த கதை இத்தாலிய பழங்கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)

 

முற்றும்