Saturday, August 17, 2024

மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 1

 

மகத தேசத்தின்  மன்னன் பத்திரபாகு . அவனின் மதி மந்திரி மந்திர குப்தா . மந்திர குப்தா ஒரு திறமையான மந்திரியாக திகழ்ந்தார் . ஒரு நாள் தனது மன்னர் மிகவும் வருத்தத்துடன் இருப்பதை அவர் கவனித்தார் . “மன்னா தங்கள் முகம் ஏன் இப்படி வாடி இருக்கிறது”  என்று கேட்டார்.

 ஒரு பெருமூச்சுடன் அவர்

  “ வாரணாசியின் மன்னன் தர்ம கோபனுக்கு ஒரு மகள் இருக்கிறார் . அவள் பெயர் அனங்க லீலா . அவள் அழகிற்கு ஈடு இணை இந்த மூவுலகிலும் இல்லை”  என்று கூறி இன்னொரு பெருமூச்சு விட்டார் . உடனே மந்திரி  “அவளை நீங்கள்  மணக்க விரும்புகிறீர்களா”  என்று கேட்டார் . மன்னனும் “ நிறைய தடவை நான் அவரிடம்  அனங்க லீலாவை எனக்கு மணமுடித்து கொடுக்கும்படி கேட்டுவிட்டேன் ஆனால் அவர் என் மேல் இருக்கும் கோபத்தால் மறுத்துவிட்டார்” என்றதும் , மந்திரி மிகவும் ஆச்சரியத்துடன் “ இவ்வளவு படை பலத்துடன் இருக்கும் உங்களுக்கு அவர் மகளை மணம் முடித்துக் கொடுக்க ஏன் மறுக்கிறார்”  என்று கேட்டார்.  அதற்கு மன்னன்”  தர்ம கோபனிடம் ஒரு யானை இருக்கிறது அதன் பெயர்

 பத்ரதந்தா.  அந்த ஒரு யானை படையில் இருப்பதால்,  அந்த மன்னனை எவ்வளவு தைரியமான , படை பலத்துடன்   படையெடுத்து வந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்ற துணிச்சலில் அவர் எனக்கு அவர் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க மறுக்கிறார் . எனக்கும் அனங்க லீலாவுக்கும் மணமுடிப்பதில் இருக்கும் பிரச்சனையே அந்த யானை தான்”  என்று கூறி முடித்தார். 

 

“ அந்த யானையைப் பற்றி தெரிந்த எல்லோருக்கும் தெரியும் அந்த யானை ஒன்றே எவ்வளவு பெரிய படை பலத்துடன் யார் வந்தாலும் வெற்றியை தனது மன்னர் பக்கம் கொடுக்கும் என்று . அந்த மமதையில் தான் அவர் இப்படி இருக்கிறார்.  அந்த ஒரு யானையை இல்லாமல் செய்து விட்டால் நான் அனங்க லீலாவை மணப்பதை யாராலும் தடுக்க முடியாது”  என்று கூறி பெருமூச்சு விட்டார் அப்பொழுது அந்த மதி மந்திரி “ நான் இந்த விஷயத்தை பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் நிம்மதியாக இருங்கள்”  என்று கூறினார் .

பகுதி ஒன்று நிறைவு

 

(இந்தக் கதை கதா சரித்  சாகரா விலிருந்து தழுவி எழுதப்பட்டது)

No comments:

Post a Comment