ஒரு ஊரில் பரம ஏழைகளான ஒரு தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அதில் மூன்றாவது மகனுக்கு பெயர் மிகவும் புதுமையாக இருந்தது . அவன் பெயரே சாம்பல் பையன். இந்த பெயர் அவனுக்கு வந்ததற்கு காரணம் அவன் வேறு எந்த வேலையும் செய்யாமல், எப்பொழுதும் சாம்பலை கிளறிக் கொண்டிருந்தது தான் . இப்படி இருக்கையில் ஒரு நாள் மூத்த மகன், தன் தந்தையை அணுகி தான் வெளி உலகத்திற்கு சென்று சம்பாதிக்கப் போவதாக கூறினார் . தந்தையும் சம்மதித்தார் . வெகுதூரம் நடந்த மூத்த மகன் ஒரு அரண்மனை வாயிலை அடைந்தார். அந்த அரண்மனையின் மன்னர் அரண்மனை வாயிலில் நின்று கொண்டிருந்தார் . அந்த மூத்த மகனை பார்த்து “ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் “ என்று கேட்டார் . அதற்கு அவர் “ நான் ஒரு வேலை தேடி சென்று கொண்டிருக்கிறேன்” என்று கூறினார் . அதற்கு அந்த மன்னர் “ நீ என்னுடைய ஏழு குதிரை குட்டிகளை கவனித்துக் கொள்ள சம்மதமா? ” என்று கேட்டார் . மூத்த மகன் அதிசயத்தில் “ குதிரை குட்டிகளையா” என்று கேட்டார்.
“ ஆம்”என்று தலை அசைத்த மன்னர் “ உன்னுடைய வேலை தினமும் காலையில் அவிழ்த்து விடும் அந்த ஏழு குதிரை குட்டிகளுடன் சென்று என்ன சாப்பிடுகின்றன, என்ன குடிக்கின்றன , என்பதை அறிந்து எனக்குச் சொல்ல வேண்டும் அப்படி நீ செய்தால் உனக்கு என் மகளை மணம் முடித்துக் கொடுப்பதுடன் என் ராஜ்யத்தில் பாதியை கொடுப்பேன்” என்று கூறியவுடன் மூத்த மகனின் வாய் அடைத்து விட்டது. மன்னர் “ ஒரே ஒரு நிபந்தனை. நீ அதை சரியாக செய்யாவிட்டால், கடுமையாக தண்டிக்கப்படுவாய் . சரி , என்றால் இப்பொழுதே வேலையில் சேரலாம் “ என்று கூறியவுடன் மூத்த மகன் சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடிப் போனார். உடனே இதற்கு சம்மதித்தார் . மறுநாள் காலையில் குதிரை லாயத்தின் தலைவன் , அரண்மனை லாயத்தில் இருந்த ஏழு குதிரை குட்டிகளையும் அவிழ்த்து விட்டார் . அவைகள் காடு மலைகளை த்தாண்டி வெகு வேகமாக, வெகு தூரம் ஓடத் தொடங்கின. ஆனால் சீக்கிரமே அந்த மூத்த மகன் களைப்படைந்து நின்று விட்டார்.
பகுதி ஒன்று நிறைவு
(இது ஒரு நார்வீஜியன் நாட்டின் பழங்கதைகளை தழுவி எழுதப்பட்டது)
No comments:
Post a Comment