Tuesday, July 2, 2024

கழுகும், மண்ணை கிளறும் கோழியும் - பாகம் 2


எல்லா பறவைகளும் கோழி இடம் இருந்து ஊசியை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக பறக்க ஆரம்பித்தன.  ஒரு பறவை சிறகுகளை  தைத்துக் கொண்டு, கோழியிடம் அந்த ஊசியை திருப்பிக் கொடுக்க, அதன் வீட்டிற்கு சென்றபோது கோழி வெளியே சென்று இருந்தது.  ஆனால் அதன் குழந்தைகள் அங்கு இருந்ததால்,  அந்தப் பறவை நன்றி கூறிவிட்டு,  ஊசியை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு சென்றது. குழந்தைகள் அந்த ஊசியை வைத்துக்கொண்டு விளையாடிவிட்டு மண்ணில் போட்டுவிட்டு தூங்க சென்று விட்டன.

இதனிடையில் சிறிது நாட்கள் சென்ற பிறகு கழுகிற்கு இவ்வளவு நாள் பறந்ததால், சில சிறகுகள் விழுந்து விட்டதால், புதிதாக தைப்பதற்கு ஊசி தேவைப்பட்டது. ஆகவே அந்தக் கழுகு கோழியின் வீட்டிற்கு வந்து தன்னுடைய ஊசியை திருப்பி கேட்டது.

கோழி அங்கும் இங்கும் அதன் வீட்டில் எங்கு தேடியும் அதற்கு ஊசி கிடைக்கவில்லை.  ஆகவே வருத்தத்துடன் கழுகிடம் “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் தேடி வைக்கிறேன்.  நாளைக்கு வந்து வாங்கிக் கொண்டு உன்னுடைய  சிறகுகளை நீ தைய்த்துக் கொள்ளலாம்” என்று கூறியது. 


தன்னுடைய ஊசி தனக்கு  வேண்டும்போது கிடைக்காத கோபத்தில், அந்த கழுகு “நாளை நான் வருவேன். நீ அந்த ஊசியை திருப்பிக் கொடுக்காவிட்டால் உன்னுடைய குஞ்சுகளை எடுத்துச் சென்று  விடுவேன்”  என்று கோபமாக கூறியது . மறுநாள் கழுகு வந்து கோழியிடம் ஊசி கேட்டபோது, அது மண்ணைக் கிளறிக் கொண்டு ஊசியை தேடிக்கொண்டிருந்தது.  ஆனால் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை அது மண்ணைக் கிளறி ஊசியை தேடிக்கொண்டே இருந்தது.  அது அப்பொழுதிலிருந்து எப்பொழுதெல்லாம் கழுகு கண்ணில் படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக மண்ணைக் கிளறி ஊசியை தேடிக் கொண்டிருக்கிறது.

 இன்றைக்கும் கோழிகள் மண்ணை எப்பொழுதும் கிளறிக் கொண்டிருப்பதற்கு இதுதான் காரணமோ ?

(இந்தக் கதை ஆப்பிரிக்க பழங்கதையை தழுவி எழுதப்பட்டது)




No comments:

Post a Comment