அந்த கிழவி கூறிய திட்டத்தின் படி, ஒரு பெரிய தங்கத்தால் ஆன சிங்கம் தயாரித்து, அதன் கண்கள் மட்டும் கண்ணாடியால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் உள்ளே இருந்து சில இசை வெளிவரும் படி இருக்க வேண்டும் என்றும் கூறினார். இதைக் கேட்டவுடன் அந்த மூன்றாவது மகனுக்கு அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தாலும் தன் சகோதரர்களை மீட்கவும், அந்த இளவரசியை தேடவும், அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே அந்தக் கிழவி கூறியபடி ஒரு தட்டானிடம் சென்று ஒரு தங்க சிங்கம் கிழவி கூறியபடியே செய்யச் சொல்லி வாங்கிக்கொண்டார். அதை எடுத்துக் கொண்டு அந்தக் கிழவியிடம் சென்றார் . அவர் அந்த மூன்றாவது மகனை அந்த சிங்கத்திற்குள் ஒளிந்து கொள்ளும்படி கூறினார். அந்த சிங்கத்தை ஆட்களை வைத்துக்கொண்டு, அரசனிடம் எடுத்துச் சென்றார். அரசருக்கு அந்த தங்க சிங்கத்தை பார்த்து அதை உடனே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது . அவர் அதன் விலை என்ன? என்று கேட்டவுடன் அந்த கிழவி “இது என்னுடையது அல்ல. நான் வேலை செய்யும் இடத்தில் அதன் சொந்தக்காரருக்கு சொந்தமானது. வேண்டுமானால் ஒரே ஒரு நாளைக்கு இந்த சிங்கத்தை தங்களுடைய அரண்மனையில் விட்டு வைக்கிறேன் . அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது . நான் நாளைக்கு வந்து இதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் “என்று கூறியவுடன் அந்த அரசனும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார் .
அந்தக் கிழவி அரண்மனையில் இருந்து வெளியேறியவுடன், அந்த சிங்கத்தை எடுத்துக் கொண்டு அரசன் தன்னுடைய அறைக்குச் சென்றார். அங்கு சென்று அந்த அறையின் தரையில் இருந்த சில செங்கற்களை நீக்கிவிட்டு அதன் கீழ் அமைக்கப்பட்டு இருந்த படி வழியாக கீழே இறங்கி செல்ல தொடங்கினார். ஒவ்வொரு கதவாக திறந்து கொண்டு , ஏழு கதவுகள் வழியாக சென்ற பிறகு கடைசியாக இருந்த கதவை திறந்தார். இதை வியாபாரியின் மூன்றாவது மகன், சிங்கத்துக்கு உள்ளிருந்து அதன் கண்ணாடி கண் வழியாக இதையெல்லாம் தன் மனக் கண்ணில் குறித்துக் கொண்டார் .
(இது ஒரு இத்தாலிய பழக்கதையை தழுவி எழுதப்பட்டது)
No comments:
Post a Comment