Saturday, March 30, 2024

இளவரசனும் மலர்ராணி மகளும் பாகம் 5

 

இப்படி  கூறிய அந்த கழுகு அரசன் வானத்தில் பறந்து சென்றது.  அன்று மாலை இளவரசன் வானத்தை  நோக்கிய  போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது . ஆயிரம் கருடன்கள் ஒன்று சேர்ந்து அந்தக் குதிரையை பூமிக்கு தள்ளிக் கொண்டு வந்து,  அந்த இளவரசனின் முன்பு நிறுத்தியது . இளவரசனையும் குதிரையும் பார்த்த பறக்கும் பாம்பின் அன்னையின் முகத்தில் வியப்பு அப்பட்டமாக தெரிந்தது . இதற்கு பரிசாக அந்த மூதாட்டி அவனுக்கு தாமிரத்தினால் ஆன ஒரு கவசத்தை கொடுத்து , இன்று இரவு. நான் எல்லோருக்கும் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள அனுமதித்தார் . அங்கு அந்த மலர் ராணியின்  மகளை காணும் வாய்ப்பை அவர் பெற்றார் . அங்கு நிறைய பறக்கும் நாகங்கள் ஆண் பெண் என்று ஜோடி சேர்த்து ஆடிக் கொண்டிருந்தனர் . ஆனால் அந்த  மலர் ராணியின் மகள் மட்டும் தனியாக இருந்தார் . அவருடைய முகத்தில் தனியான கம்பீரமும்,  நேர்த்தியான அழகும் தெரிந்தது . அவரை அடையாளம் கண்டு கொண்ட இளவரசன் தான் அங்கு வந்த காரணத்தை அவரிடம் கூறினார்.  மலர் ராணியின் மகள் அவரை பார்த்து தலையை அசைத்து , நீங்கள் மூன்று நாளும் அந்தக் குதிரையை மேய்சலுக்குப்பின் திரும்பி கொண்டு வந்து விட்டீர்கள் என்றால் பறக்கும் நாகத்தின் அன்னை உங்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதாக அறிவிப்பார் .

 


அப்பொழுது நீங்கள் அந்தக் குதிரையை பார்த்துக் கொண்டதற்கு பரிசாக இந்த குதிரையின் குட்டியை கேளுங்கள்.  மலர் ராணியின் மகள் அப்படி எதற்காக கூறினார் என்பது தெரியாவிட்டாலும் இளவரசன் சரி என்பது போல் தலையை அசைத்தார்.

மறுநாள் வழக்கம் போல் அந்த இளவரசன் அந்தக் குதிரையை மேய்க்க எடுத்துச் சென்றபோது , அது எதிர்பார்த்த படியே  மறைந்து விட்டது . ஆனாலும் இளவரசனுக்கு அதை பார்த்து பயமோ  வியப்போ ஏற்படவில்லை . இப்பொழுது அவரிடம் இருந்த மணியை இரண்டு முறை அடித்தார் . உடனே அவர் முன் அந்தக் காட்டின் நரிகளின் அரசன் தோன்றினார் . தோன்றியது மட்டுமல்லாமல் “ உன்னைப் பற்றியும்   , உன் நோக்கம் பற்றியும் எனக்கு எல்லாம் தெரியும் . என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நரிகளையும் அனுப்பி இன்று மாலைக்குள் உன்னிடம் அந்தக் குதிரை வந்து சேரும்படி செய்கிறேன் . அது இப்பொழுது அருகில் உள்ள மலையில் ஒளிந்து கொண்டிருக்கிறது .”என்று கூறினார் . அன்று மாலை இளவரசன் எதிர்பார்த்தபடி ஆயிரக்கணக்கான நரிகள் ஒன்று சேர்ந்து அந்தக் குதிரையை இளவரசனிடம் கொண்டு சேர்த்தது .அவரும் அதை பறக்கும் நாகத்தின் அன்னையிடம் கொண்டு சேர்த்ததும் , அவருக்கு வியப்பானது . இந்த முறை பரிசாக அவருக்கு வெள்ளியினால் ஆன கவசத்தை அவருக்கு வழங்கினார் . அது மட்டும் இல்லாமல் அவரே இளவரசனை அன்றைய இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார் . அவரை கண்ட மலராணியின் மகளுக்கும் இரண்டாவது நாளும் இளவரசன் வெற்றிகரமாக குதிரையை திருப்பிக் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளித்தது .

 


அவர் இளவரசனிடம்”  நாளையும் நீ வெற்றிகரமாக திரும்பி வந்தால்.  அந்த பறக்கும் நாகத்தின் அன்னையிடம் பரிசாக பெற்ற அந்த  குதிரை குட்டியை எடுத்துக்கொண்டு இதே புல்வெளிக்கு நாம் இருவரும்  சென்று , அங்கிருந்து பறந்து சென்று விடுவோம்“ என்றூ கூறினார். எதிர்பார்த்தபடியே மூன்றாவது நாளும் குதிரை காணாமல் போக இளவரசன் மூன்று முறை மணி அடித்தவுடன் மீன்களின் தலைவன் அவர் முன் தோன்றினார் . அவர் குதிரை பக்கத்தில் இருந்த நதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது தான் பார்த்ததாகவும் , அதைக் கொண்டு வந்து இளவரசனிடம் சேர்ப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தபடியே செய்யவும் செய்தார்.

 

(5 வது பாகம் முடிவு இது ஒரு ஐரோப்பிய பழங்கதையின் படி தழுவி எழுதப்பட்டது)

No comments:

Post a Comment