Friday, March 29, 2024

ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே

 

இந்தக் கதையில் நாம் பார்க்கப்போவது சிங்கமும் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் பசுக்களையும் பற்றியது.

ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு வளமான பச்சை பசேல் என்ற புல் வெளிக் கொண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கு நிறைய பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன.சிங்கத்திற்கு தனக்கு இருந்த பசியில் ஒரு கொழு கொழு என்று இருந்த ஒரு பசுவின் மீது அதன் கவனம் திரும்பியது.ச ரியான சமயத்தில் அது அந்த பசுவின் மீது பாய தயாரான போது  அதன் நண்பனான இன்னொரு பசு இதை பார்த்து சிங்கத்தை நோக்கி அதன் பக்கவாட்டில் ஒரு குத்து கொம்பால் குத்திய உடன் கதி கலங்கி சிங்கம் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு ஓடியது.



பாதுகாப்பான அந்த புதரில் இருந்து அந்த சிங்கம் அந்த இடத்தை நோட்டம் விட்டது.  அப்பொழுது அதற்கு புரிந்தது இந்த பசுக்களிடம் ஒற்றுமை இருக்கும் வரை அவைகளை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஒரு பசு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது மற்ற பசுக்கள் அதனை பாதுகாக்க விரைந்து வருவதை அது பார்த்து வைத்துக் கொண்டது

சந்தேகமே இல்லாமல் சிங்கம் ஒரு பலசாலி தான்.ஆனால் இந்த பசுக்கள் ஒற்றுமையாக மேய்ந்து கொண்டிருந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அதற்கு தெளிவாக புரிந்தது.

அவைகள் இப்படி இருக்கும் வரை தான் பசியால் வாட வேண்டியது தான் என்று வருத்தத்துடன் அமைதியாக நின்று கொண்டிருந்தது.

இப்படியே சில நாட்கள் சென்ற பிறகு சிங்கம் மறுபடியும் அதே புதருக்கு வந்து யார் கண்ணிலும் படாமல் மறைந்து நின்று கொண்டிருந்தது .சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு ஒரு பசு மேய்ந்து கொண்டு சிங்கத்தின் மிக அருகில் வந்தது. உடனே சிங்கம் தனது சாதாரணமான குரலில் அன்புடன் பசுவின் “உன்னுடன் நான் சிறிது பேச விரும்புகிறேன் “என்று கூறியவுடன் நடுநடுங்கி பசு அந்த இடத்திலிருந்து ஓட எத்தனித்தது.

 


சிங்கம் பசுவிடம் “என்னைப் பார்த்து நீ பயப்படுவதற்கு எந்த அவசியமும் இல்லை. நான் வயிறு நிரம்ப சாப்பிட்டாகிவிட்டது .ஆதலால் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய நான் இங்கு வரவில்லை” என்று அன்பு ததும்ப கூறியது.

பசு அக்கம் பக்கம் பார்த்தபோது அதன் நண்பர்கள் அருகிலேயே மேய்ந்து கொண்டிருந்ததால் அதற்கு இருந்த பயம் காணாமல் போய்விட்டது .அதற்கும் இந்த சிங்கம் என்ன தான் சொல்ல வருகிறது என்று கேட்பதில் ஒரு ஆர்வம் உண்டாகியது

சிங்கம் பசுவிடம் ரகசியமான குரலில் “இப்பொழுது இந்தக் கூட்டத்தில் இருப்பவர்களிலேயே நீதான் மிகவும் அழகாக இருக்கிறாய். இதை பார்த்து மற்ற பசுக்களுக்கு உன் மேல் பொறாமையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உன்னையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ எப்பொழுது என்ன செய்வாய் என்று அவர்கள் பயப்படுவது போல் தோன்றுகிறது. நீ சிறிது ஜாக்கிரதையாக இருப்பது உனக்கு நல்லது. நான் சொல்வதை சொல்லிவிட்டேன் அப்புறம் உன்னுடைய இஷ்டம் என்று கூறியது.



இதைக் கேட்டவுடன் பசுவிற்கு தன்னை இந்த சிங்கம் புகழ்வதுடன் தனக்கு நல்ல அறிவுரையும் கூறுகிறது. இதைப் போன்ற நண்பர்கள் கிடைப்பது அரிது என்று நினைத்ததுடன் ,மற்ற பசுக்களின் மீது அதற்கு சந்தேகமும் வந்தது. சிங்கம் இதே பாணியை மற்ற பசுக்களுக்கும் அந்தந்த சந்தர்ப்பம் வாய்க்கும்  போது இந்த சந்தேகத்தை அவர்களின் மனதில் ஏற்படுத்தியது.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள்.

அதைப்போல் அந்த பசுக்களும

ஒன்றிலிருந்து ஒன்று பரஸ்பர நம்பிக்கை குறைந்து தனக்கு இன்னொருவர் எப்பொழுது தீங்கு இழைப்பார்களோ என்ற எண்ணம் வந்தது. ஆகவே முடிந்தவரை அவைகள் ஒன்றை விட்டு ஒன்று விலகியே மேய ஆரம்பித்தன.

இதனால் அந்த சிங்கத்திற்கு பசுக்களை உணவாக உட்கொள்வதில் இதன்பிறகு எந்த விதமான பிரச்சினையும் வரவில்லை. அந்த சிங்கம் ஒரு பசுவை கொல்லும் பொழுது , அவைகள் தன்னில் ஒரு பகைவன் ஒழிந்தான் என்று எண்ண ஆரம்பித்தன. சிங்கத்திற்கு அதன் பிறகு உணவு கிடைப்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்கவில்லை.

சும்மாவா சொன்னார்கள் பெரியோர், சிங்கம் காட்டுக்கு ராஜா என்றும் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்றும்.

பஞ்சதந்திர கதைகளிலிருந்து தழுவப்பட்டது

No comments:

Post a Comment